×

பட்டுக்கோட்டை பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதத்துடன் தண்டனை: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் தினசரி வீடுகளில் சேகரமாகும் மக்கும் குப்பைகளை  கொண்டு நுண் உரம் செயலாக்க மையத்தின் மூலம் உரமாக்கும் பணி, மக்காத குப்பைகளை அரியலூர் சிமென்ட் ஆலைக்கு அனுப்பியும், எலக்ட்ரானிக்  கழிவுகளை மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட நிறுவனத்தில் ஒப்படைத்தும், நாப்கின் போன்ற அபாயகரமான கழிவுகளை  இன்ஸினேரட்டர் மூலம் எரித்தும் திடக்கழிவுகள் தரம் பிரித்து முறையாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு குப்பைகளை தரம் பிரித்து அனுப்புவதால் உரக்கிடங்குக்கு குப்பைகள் செல்லாமலும், எங்கும் குப்பைகளை கொட்டி குவிக்காமலும்,  வைக்காமலும் பராமரிக்கப்படுகிறது. நகரில் இதுவரை பயன்பாட்டில் இருந்த 122 குப்பை தொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்  தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகளை அவர்களே தரம் பிரித்து நகராட்சி துப்புரவு பணியாளரிடம் ஒப்படைக்கும் சூழல் உள்ளது. 2 குப்பை  தொட்டிகள் வைக்காத வீடுகள், நிறுவனங்கள் மற்றும் குப்பைகளை தரம் பிரித்து தராத நிறுவனங்கள், வீடுகளுக்கு அபராதம் விதிக்கும் பணியும்  நடந்து வருகிறது. இந்நிலையில் குப்பைகளை தரம் பிரித்து தராத ஒரு சில வீடுகள் மற்றும் நிறுவனங்கள் இரவு நேரங்களில் பொது இடங்களில்  சட்டத்துக்கு புறம்பாககொட்டி வருவதும் அப்பகுதியை துப்புரவு செய்து அங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் நிறுவி  நகராட்சியால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் நேற்று துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் ரயில்வே  ஸ்டேஷன் ரோடு மெயின் ரோட்டில் ஓரத்தில் பொது இடத்தில் குவிந்திருந்த குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி துப்புரவு பணி மேற்கொண்டு  பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள்  வைத்து நகராட்சியால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் நடந்தது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுப்பையா கூறுகையில், பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுவதுடன்  திடக்கழிவு மேலாண்மை விதிகளின்கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். நகரின் தூய்மை பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  பாரதி சாலையில் ஒரு காலனியில் செப்டிக் டேங்க் கழிவுநீரை மோட்டார் பொருத்தி பொது கழிவுநீர்வடிகாலில் விடுவது கண்டறியப்பட்டதால் உடனடியாக ரூ.50 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டது. நகரில் பிளாஸ்டிக் பயன்பாடு தினசரி ஆய்வு  செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றார்.



Tags : commissioner ,Pattukkottai ,places ,area , Garbage dumping , Pattukkottai, Municipal commissioner, warned
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை